தினமலர் 11.08.2010
மாநகராட்சி நிர்வாகத்தில் தனியார் நிறுவனங்கள்
சீரற்ற, ஒழுங்கற்ற வருகைப் பதிவேடு பராமரிப்பு, பழுதாகும் கம்ப்யூட்டரை சீரமைக்க காலம் கடத்துவது போன்றவையால், மாநகராட்சியில் சம்பள ஊழலுக்கு வழி வகுத் துள்ளது தெரிய வந்துள்ளது.கோவை மாநகராட்சியில், ஒவ்வொரு பராமரிப்புக்கும் ஒவ்வொரு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றன. கழிப்பறை முதல் கம்ப்யூட்டர் பாரமரிப்பு வரை எல்லமே தனியார் நிறுவனங்களை நம்பும் நிலைக்கு வந்து விட்டது மாநகராட்சி.
போட்டி போட்டுக் கொண்டு டெண்டர் எடுத்து, சரிவர பணிகளை முடிக்காமல், காசு பார்ப்பதில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளன தனியார் நிறுவனங்கள். தனியார் நிறுவனங்களே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், மாநகராட்சி நிர்வாகமும் கூட, தனியார் பராமரிப்புக்கு சென்று விடும் அபாயம் உள்ளது.சமீபத்தில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், மின்னணு கைரேகை பதிவு இயந்திரத்தை முடக்கி விட்டு, வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு முறைகேடாக சம்பளம் பெற்றுள்ளனர். சுகாதார ஆய்வாளர்களும் இதில் பங்கு பெற்றுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை.
இது குறித்து, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சிலர் கூறியதாவது:வருகைப்பதிவேடு முறைகேட்டில், ஒரு சில சுகாதார ஆய்வாளர்கள் தான் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகராட்சியிலுள்ள நான்கு மண்டலங்களில் 2,817 நிரந்தர துப்புரவு தொழிலாளர்களும், 405 தற்காலிக துப்புரவு தொழிலாளர்களும் பணியில் உள்ளனர். தொழிலாளர்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்து விட்டு, பணியை தொடர்கின்றனர். பதிவுகள் உடனுக்குடன் வார்டு அலுவலகத்திலுள்ள கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்யப்படுகிறது. பதிவிறக்கம் செய்யப்பட்டதை “நெட்‘ இணைப்பில் தலைமை அலுவலகத்திற்கு செல்கிறது.
பலநேரங்களில் “நெட்‘ இணைப்பு கிடைக்காது; அல்லது, வார்டு அலுவலகங்களிலுள்ள கம்ப்யூட்டர் தொடர்ந்து பழுதில் இருக்கும். பழுதை சரிசெய்ய ஒப்பந்தம் எடுத்துள்ள “எச்.சி.எல்.,’ நிறுவன பணியாளர்கள் யாரும் உடனடியாக வந்து பழுதை சரி செய்வதில்லை. இதே போன்று, மின் தடை ஏற்படும் நேரங்களில், வருகை பதிவு செய்ய “யு.பி.எஸ்‘ வாங்கியது மாநகராட்சி. ஆனால், இவை தரமற்றவையாக இருப்பதால், நீண்ட நேரத்துக்கு மின்சாரம் இருக்காது.வருகைப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் கைரேகை பதிவு இயந்திரத்தை “வெஸ்டீஜ்‘ நிறுவனம் நிர்வகிக்கிறது. கம்ப்யூட்டர் சிஸ்டத்தை எச்.சி.எல்., நிறுவனமும், “நெட்‘ இணைப்பை ரிலையன்ஸ் நிறுவனமும் நிர்வகிக்கிறது. கம்ப்யூட்டருக்குரிய “சிபியு‘ “யுபிஎஸ்‘சை, கோவை மாநகராட்சி செய்கிறது. பதிவிறக்கம் செய்து சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியை சரவணம்பட்டியிலுள்ள கே.ஜி. ஐ.எஸ்.எல்., நிறுவனம் செய்கிறது. இவ்வாறு ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளன.கம்ப்யூட்டர் இயங்காவிட் டாலோ, கைரேகைப்பதிவு இயந்திரம் வேலை செய்யாவிட்டாலோ ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் சொன்னால்,”எங்களுக்கு சம்பந்தமில்லை‘ இது “அந்த‘ நிறுவனத்தின் சிக்கல்… எனக் கூறி தட்டிக் கழிக்கின்றனர்.
ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் பழுதுகளை சரிசெய்யும் மாநகராட்சி “புரோகிராமர்‘ சவுதாமணியிடம் கூறினால், “இது அவர்களுடைய பணி; நான் தலையிட முடியாது‘ எனக் கூறி விடுகிறார். ஒவ்வொருவராக தட்டிக் கழிப்பதால், வருகைப்பதிவு இயந்திரம் எப்போதுமே சரியாக இயங்குவதில்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுத்தொழிலாளர்களுடன் சேர்ந்து, மோசடியில் ஈடுபடுகின்றனர். வருகைப்பதிவேட்டில் கையொப்பமிட்டு, துப்புரவு தொழிலாளர்களுக்கு முழுச் சம்பளத்தையும் பெற்றுத் தருகின்றனர். அதில், பங்கும் வாங்கிக் கொள்கின்றனர்.எனவே, மாநகராட்சி வருகைப்பதிவேடு பராமரிப்பை ஒரே நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம்; அல்லது கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரலாம். தேவையான ஆட்களை நியமிக்கலாம். மாநகராட்சி சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் பணிகளை கையாள கூடுதல் பணியாளர்களை அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது நிருபர்-