தினகரன் 30.09.2010
மாநகராட்சி பகுதியில் மாடு வளர்க்க தடை கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
திருச்சி, செப் 30: திருச்சி மாநகராட்சி எல்லையில் மாடுகள் வளர்க்க தடை விதிக்க வேண்டும் என்று மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் சுஜாதா தலைமை வகித்தார். கமிஷனர் பால்சாமி, துணைமேயர் அன்பழகன் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஸ்ரீராமன் பேசுகையில், மாமன்ற ஒப்புதலுக்கு வராமல் டெண்டர் குறித்த விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல் கடந்த காலங்களில் நடந்ததில்லை என்றார்.
கமிஷனர் பால்சாமி கூறு கையில், மாநகராட்சியில் ரூ20 லட்சம் வரையிலான பணிகளை மேற்கொள்ள மேயருக்கும், ரூ10 லட்சம் வரையி லான பணிகளை மேற் கொள்ள கமிஷனருக்கும் அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
அதிமுக எதிர்கட்சி தலைவர் சீனிவாசன் பேசுகையில், கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் வாங்க 9 மாதங்களுக்கு முன்பு மாமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இதை செயல்படுத்தவில்லை. கொசுக்களால் உருவாகும் பல்வேறு நோய்களால் திருச்சி மாநகர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். கமிஷனர் பால்சாமி கூறுகையில், ஒரு சில நாட்களில் மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுயேச்சை கவுன்சிலர் வெங்கட்ராஜ் பேசுகையில், எனது வார்டில் நூற்றுக்கணக்கான மாடுகள் ரோடுகளில் திரிகின்றன. சேலம் மாநகராட்சி எல்லையில் மாடுகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருச்சி மாநகராட்சியிலும ஏற்படுத்த வேண்டும் என்றார். இதே கருத்தை வலியுறுத்தி அதிமுக சீனிவாசன், தேமுதிக ஜெரால்டு பேசினர்.
கமிஷனர் கூறுகையில், ரோடுகளில் திரியும் மாடுகளை பிடித்து பொன்மலை ஜி கார்னர் பகுதியில் உள்ள மாட்டு இறைச்சி கூடம் முன்பு ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும். குரங்குகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என் றார். அதிமுக கவுன்சிலர் முத்துமாரி தேவி பேசுகையில், எனது வார்டில் பூங்கா நிலத்தை தனியார் ஆக்ரமித்துள்ளனர். இதை மீட்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
தேமுதிக கவுன்சிலர் ஜெரால்டு பேசுகையில், தனியார் நிறுவனத்திற்காக சாலை, வடிகால்களை மாற்றி அமைக்க பொருள் வைக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை இருப்பதால் அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றிவிடலாம் என்று நினைப்பது சரியல்ல என்றார்.
துணைமேயர் அன்பழகன் பதிலளிக்கையில், அனைத்திற்கும் குழு அமைக்கப்பட்டு தான் முடிவு எடுக்கப்படுகிறது. மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் கவுன்சிலர்கள் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கலாம் என்றார். தொடர்ந்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.