தினமலர் 17.02.2010
மாநகராட்சி பள்ளி மாணவருக்கு இலவச வினா–விடை புத்தகம்
சேலம்: சேலம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி சார்பில் வினா–விடை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. சேலம் மாநகராட்சி பள்ளிகளில், 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலுகின்ற மாணவ, மாணவியரின் கல்வித் திறனை ஊக்கவிக்கும் வகையிலும், அரசு பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் மற்றும் உயர் மதிப்பெண்கள் பெறும் வகையிலும் மாநகராட்சி சார்பில் வினா–விடை புத்தகங்கள் தயாரிக்க கடந்த பட்ஜெட்டில் முடிவெடுக்கப்பட்டது. மாநகராட்சி கல்வி நிலைக்குழு தலைவி சாரதாதேவி மற்றும் உறுப்பினர்களின் மூலம் வினா–விடை வங்கி புத்தகங்களை தயார் செய்யப்பட்டன. இப்புத்தகங்களை பள்ளி மாணவியருக்கு இலவசமாக வழங்கும் விழா நேற்று மாநகராட்சியில் நடந்தது. கமிஷனர் பழனிச்சாமி, துணைமேயர் பன்னீர்செல்வம், உதவி ஆணையாளர்கள் தங்கவேல், நெப்போலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு மேயர் ரேகா பிரியதர்ஷிணி புத்தகங்களை வழங்கினார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 8,810 புத்தகங்களும், 6,600 வரைப்பட பிரதிகளும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 6,550 புத்தகங்களும் நேற்று வழங்கப்பட்டன.