தினமலர் 09.10.2013
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் முன்னோடிகளாக வேண்டும்
கோவை:””மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னோடிகளாக திகழ வேண்டும்,” என, மேயர் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி எஸ்.ஆர்.பி., அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், ஆசிரியர்கள் தினவிழா மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
இவ்விழாவில், மாநகராட்சி மேயர் வேலுச்சாமி பேசியதாவது :
மாநகராட்சி பள்ளியில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்துவதுடன், மன அமைதிக்காக யோகா மற்றும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. மாநகராட்சி பள்ளி மாணவர்களை முன்னாள் மாணவர்கள் சங்கம் ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்குவதுடன் ஆசிரியர்களையும் கவுரவிப்பது பாராட்டுக்குரியது. மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னோடிகளாக திகழ வேண்டும், என்றார்.
விழாவில், மாநகராட்சியிலுள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 27 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. மாநகராட்சி பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 139 மாணவ, மாணவிகளுக்கு நினைவுப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை மாநகராட்சி மேயர் வழங்கினார். விழாவில், மாநகராட்சி கல்வி அலுவலர் வசந்தா, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் குப்புசாமி, செயலாளர் மாணிக்கம், பொருளாளர் சுந்தரம், நிகழ்ச்சிக்குழு தலைவர் சண்முகம் பேசினர்.