மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகள் சாதனை
மதுரை, : மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்2 தேர்வில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியின் பொறுப்பில் 14 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் சார்பில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 537 பேர் பிளஸ்2 தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 363 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 1,837 பேர் மாணவிகள். 526 பேர் மாணவர்கள். மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களை மாணவிகள் பிடித்து சாதனை படைத்தனர். அவர்கள் விபரம்:
முதலிடம்: மீனலோசினி, மதிப்பெண்& 1,158 அவ்வை மேல்நிலைப்பள்ளி. பொன்னகரம் 1&வது தெருவை சேர்ந்தவர். இவரது தந்தை துரைப்பாண்டி கூலி தொழிலாளி. மீனலோசினி டாக்டராக ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
2&வது இடம்: ஜோதி, மதிப்பெண்& 1,147, வெள்ளி வீதியார் பள்ளி. ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டை சேர்ந்தவர். தந்தை ராமராஜ், டிரைவர். மாணவி ஜோதி இன்ஜினியராக ஆசை என்றார்.
3&வது இடம்: ஜெயலட்சுமி, மதிப்பெண்& 1,122 வெள்ளி வீதியார் பள்ளி. புட்டுத் தோப்பை சேர்ந்தவர். இவரது தந்தை சூரியநாராயணன், மருத்துவ பிரதிநிதி. ஜெயலட்சுமி பிகாம் படிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
இந்த 3 மாணவிகளுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வீதமும், பாடவாரியாக 200க்கு 200 மதிப்பெண் பெற்ற ஐஸ்வரியா, நந்தினி (இருவரும் வெள்ளி வீதியார் பள்ளி), பாண்டியராஜன் (திரு.வி.க. பள்ளி) ஆகியோருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதமும் மேயர் ராஜன்செல்லப்பா பரிசு வழங்கினார்.
ஆணையர் நந்தகோபால், துணை ஆணையர் சாம்பவி, உதவி ஆணையர் தேவதாஸ், கல்வி அதிகாரி மதியழகர்ராஜ், கவுன்சிலர் சீனிவாசன் பங்கேற்றனர்.
முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்2 தேர்வில் மதுரை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.14 சதவீதமாகும். 2012ல் தேர்ச்சி 92.12 சதவீதமாக இருந்தது. ஒரு சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளிகளின் வரலாற்றில் முதன் முறையாக கரிமேட்டிலுள்ள சேதுபதி பாண்டித்துரை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் ஆலிவ், 99.19 சதவீதம் தேர்ச்சி பெற்ற திரு.வி.க. பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிலட்சுமி, 98.44 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாசாத்தியார் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணம்மாள் ஆகியோருக்கு மேயர் ராஜன் செல்லப்பா பாராட்டு தெரிவித்தார்.