தினமலர் 04.032010
மாநகராட்சி பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று : கல்விக்குழு கூட்டத்தில் முடிவு
கோவை: கோவை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெறும் முயற்சியில் மாநகராட்சி கல்விக்குழு ஈடுபட்டுள்ளது.கோவை மாநகராட்சி கல்விக்குழு கூட்டம் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடந்தது. மாநகராட்சி கல்வித்துறை அலுவலர் (பொறுப்பு) சோமசுந்தரி முன்னிலை வகித்தார்.
கோவை மாநகராட்சி வசம் 16 மேல்நிலை, 44 உயர்நிலை, 25 நடுநிலை மற்றும் ஆரம்பபள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. கல்வித்தரம் மேம்படவும், படிக்கும் மாணவர்களின் தரம் மேலோங்கவும், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று விண்ணப்பித்து பெற கல்விக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.முதற்கட்டமாக 10 மேல்நிலை பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, கட்டமைப்பு பணிகள், மாணவ மாணவியருக்கு தேவையான வசதிகள், குடிநீர், கழிப்பிடம், ஓய்வறை, சாப்பிடும் அறை போன்ற வசதிகள் இல்லாத பள்ளிகளில் ஏற்படுத்த முடிவானது.
கல்வி கற்பிக்கும் ஆசிரியர் முழுமையான தேர்ச்சி பெற்றவராக இருப்பதும், இல்லாத பட்சத்தில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் குழுவை கொண்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து கல்வி குழுவில் மேற்கொள்ளப்பட்ட விவாதம்:மாநகராட்சிபள்ளி கட்டடங்களுக்கு ஒரே மாதிரி வண்ணம் பூச வேண்டும். மாநகராட்சி பள்ளி மைதானங்களில் புதர் மண்டி கிடக்கிறது. கல்வியாண்டு துவக்கத்தில் கல்விக்குழு நேரடி விசிட் சென்று, குறைகளை அறிந்து சரி செய்ய வேண்டும். பள்ளி மாணவருக்கான சீருடையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான டிக்ஷனரிகளை வழங்க வேண்டும். நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் மூலிகை மரங்களை நட வேண்டும். புதியதாக விளையாட்டு மைதானங்கள் உருவாக்க வேண்டும். மாநகராட்சி பள்ளிக்கென்று தனியாக கம்ப்யூட்டர் சென்டர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டன.இவற்றை விரைவாக செய்து முடிப்பதாக அதிகாரிகள் வழக்கம்போல் உறுதியளித்தனர்.
இக்கூட்டத்தில், கல்வி குழு உறுப்பினர்கள் மீனா, �ஷாபனா, செந்தில்குமார், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் சுகுமாறன், கணேஷ்வரன், கணக்கு அலுவலர் கோமதி விநாயகம், கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, சிவகாமி ஆகியோர் பங்கேற்றனர்.