தினகரன் 09.09.2010
மாநகராட்சி புதிய திட்டம் வாடகை சைக்கிளில் மெரினாவை சுற்றி பார்க்கலாம் பெரிய பூங்காக்களிலும் அறிமுகம்
? வி.சி.மணி
சென்னை, செப். 9: மெரினா கடற்கரை பகுதியை வாடகை சைக்கிளில் சுற்றிப்பார்க்க மாநகராட்சி புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் சைக்கிளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு சைக்கிள் இருக்கும் நிலை மாறி, மோட்டார் சைக்கிளின் எண்ணிக்கைதான் அதிகரித்து கொண்டே போகிறது. நகரத்தில் மட்டுமல்ல; கிராமத்திலும் வாடகை சைக்கிள் கடையை தேடி அலையும் பரிதாப நிலை உள்ளது.
ஒருவர் சாதாரணமாக சைக்கிளில் சென்றால் உடற்பயிற்சி மட்டுமல்ல; சுற்றுச்சூழலும் மாசுபடாமல் பாதுகாக்கப்பட்டு உலகம் வெப்பமயமாவதை தடுக்க முடியும். இதை புரிந்து கொண்ட வெளிநாடுகளில் சுற்றுலா தலங்களில் வாடகை சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொடைக்கானல், ஊட்டி ஏரி பகுதியை சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வாடகை சைக்கிளில் செல்லும் வசதி தற்போதும் நடைமுறையில் உள்ளது.
சென்னையில் மெரினா கடற்கரை பகுதி மற்றும் பெரிய பூங்காக்களில் சைக்கிள் வசதி ஏற்படுத்தப்படும் என்று மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக மெரினா கடற்கரையில் சைக்கிள் பயண திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
சென்னை மெரினா கடற்கரை உலகிலேயே இரண்டாவது நீண்ட கடற்கரை. நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 3 கி.மீ. மெரினா கடற்கரை பகுதி ரூ26 கோடியில் நவீன முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில் மெரினா கடற்கரையின் உட்புற சாலையில் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் சைக்கிளில் பயணம் செய்தபடியே கடற்கரை மற்றும் பூங்காவின் அழகை ரசிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, சைக்கிள் தயாரிப்பு நிறுவனத்துடன் மாநகராட்சி ஒப்பந்தம் செய்து கொள்ளும். அவர்களது கம்பெனி சைக்கிளை கலங்கரை விளக்கம் அருகில் நிறுத்திக்கொள்ள மாநகராட்சி இடம் கொடுக்கும். அவர்கள் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சைக்கிளை வாடகைக்கு கொடுத்து, ஒரு மணி நேர வாடகை என்று வசூலித்துக் கொள்வார்கள். ஆண்களுக்கான சைக்கிள் 30, பெண்களுக்கான சைக்கிள் 10, குழந்தைகளுக்கான சைக்கிள் 10 வாடகைக்கு கிடைக்கும் வகையில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம், மாநகராட்சிக்கும் வருமானம் கிடைக்கும்.
சைக்கிள் பயணம் காரணமாக நச்சுப் புகையை கட்டுப்படுத்தி, சுற்றுப்புறச் சுழல் மாசுபடுவதை தடுக்க முடியும் என்ற விழிப்புணர்வும் ஏற்படும். இந்த திட்டம் அனைத்தும் மாநகராட்சி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் சர்வதேச டெண்டர் விடப்படும். இதன்மூலம், சைக்கிள் தயாரிக்கும் பிரபல கம்பெனிகளில் ஒன்று தேர்ந்தெடுக்கப்படும்.
மெரினா கடற்கரை சாலையில் வாடகை சைக்கிளுக்கு கிடைக்கும் வரவேற்பை அடுத்து அண்ணா நகர் டவர் பூங்கா, பனகல் பூங்கா உள்ளிட்ட பெரிய பூங்காக்களில் வாடகை சைக்கிள் பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.