மாலை மலர் 07.08.2013

சென்னை
மாநகராட்சியில் 15 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள். ஒவ்வொரு
மாதமும் சுமார் 3000 புதிய சொத்து வரி மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த
நிலையில் நடப்பு நிதியாண்டில் 40 சதவீத சொத்து வரி வசூல்
செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
சென்னையில்
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 40 சதவீதம் வரை சொத்து வரி வசூல்
செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முடிவதற்குள் 80 சதவீதம் வரை சொத்து
வரி வசூல் செய்யப்பட்டு விடும். இந்த ஆண்டு ரூ 510 கோடி சொத்து வரி இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பழைய வரி பாக்கியையும் சேர்த்து ரூ. 700
கோடி வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ. 500
கோடி வசூலிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டது. இதில் ரூ.
461 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்தாவர்களுக்கு நோட்டீஸ்
அனுப்பியதன் மூலம் வரி செலுத்தவது அதிகரித்துள்ளது. இந்தாண்டும்
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முயற்சி செய்யப்படும்.
பழைய மாநகராட்சி
பகுதிகளை விட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சொத்து வரி அதிகம் என்று
புகார்கள் வருகின்றன. இதனை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. கூடிய விரைவில் சொத்து வரி மதிப்பீடு திருத்தியமைக்கப்படும்
அப்போது இந்த வித்தியாசம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.