தினமணி 01.09.2009
மாநகராட்சி பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் முறையீடு
திருப்பூர், ஆக. 31: “மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென‘ மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டு வெள்ளியங்காடு பகுதியில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகள், பனியன் நிறுவனங்கள் உள்ளன. திருப்பூர் நகராட்சி எல்லை பிரிவதற்கு முன்பு இப்பகுதி நல்லூர் பேரூராட்சி வசம் இருந்தது. இந்நிலையில், 1987-ல் வெள்ளியங்காடு பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா அமைக்க நல்லூர் பேரூராட்சியால் 0.90 சென்ட் ஒதுக்கப்பட்டது.
அப்பகுதி திருப்பூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கான கோப்புகள், வரைபடங்கள் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் பூங்கா அமைக்காமல் விடப்பட்டதால் அந்நிலத்தில் பெரும்பகுதியை தனியார் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர். இதுகுறித்து வெள்ளியங்காடு பகுதி மக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர், நகராட்சி மண்டல இயக்குநர், மாவட்ட வருவாய் அதிகாரி, மாநகராட்சி ஆணையர் என அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்ற தரம் உயர்வுபெற்ற திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, மாநகர அதிமுக விவசாய பிரிவு தலைவர் பி.கிருஷ்ணசாமி தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள ரூ.5 கோடி மதிப்புடைய வெள்ளியங்காடு மாநகராட்சி பூங்கா நிலத்தை மீட்டு உடனடியாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி, இப் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.