தினகரன் 17.12.2010
மாநகராட்சி முடிவு குப்பை லாரிகளில் ஜிபிஎஸ் கருவி
சென்னை, டிச.17:
சென்னையில் தினமும் சுமார் 3,500 டன் குப்பைகள் அகற்றப்பட்டு கொடுங்கையூர், பெருங்குடி குப்பை வளாகங்களில் கொட்டப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதபடி குப்பைகளை அகற்றி, அழுத்தி மற்றும் மூடி எடுத்துச் செல்லும் காம்பாக்டர் லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த லாரிகள் எந்தெந்த மண்டலத்தில் இருக்கிறது. எந்த தெருவில் இருந்து எந்த தெருவுக்கு சென்று குப்பைகளை அகற்றி எடுத்துச் செல்கிறது என்பதை அறிய காம்பாக்டர் லாரிகளில் சோதனை அடிப்படையில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு ஆன் லைன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்படி கண்காணிப்பதின் மூலம் குப்பைகளை விரைந்து அகற்றுவது மற்றும் தவறுகள் ஏதும் நடக்காமல் தடுக்க முடிகிறது. மேலும் 170க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியை பொருத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த கருவியை பொருத்துவதற்காக ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது என்று மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.