தினமணி 26.08.2014
மாநகராட்சி லஞ்சப் புகார்களையும் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்
தினமணி 26.08.2014
கோவை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை பொதுமக்கள்
தெரிவிப்பதற்காக அறிவிக்கப்பட்ட மொபைல் எண்ணில் லஞ்சப் புகார்களையும்
குறுஞ்செய்தியாக அனுப்பலாம் என்று ஆணையாளர் க.லதா தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி, விரிவாக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 100
வார்டுகளைக் கொண்டது. அனைத்துப் பகுதிகளும் 5 மண்டலங்களாகப்
பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேயராகப் பதவி வகித்த
செ.ம. வேலுசாமி, பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை வசதிகள்
தொடர்பாக மாநகராட்சியின் பிரதான அலுவலகத்துக்கோ அல்லது பிரிவு
அலுவலகங்களுக்கோ நேரில் வராமல் குறுஞ்செய்தி மூலம் மொபைல் எண்ணுக்கு
அனுப்பும் முறையைக் கொண்டு வந்தார்.
தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை மாநகராட்சி நிர்வாகத்தின்
பார்வைக்குக் கொண்டு வந்தபின் அந்தப் பிரச்னைகள் சம்பந்தப்பட்ட பிரிவு
அலுவலக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும். இதன் மூலம் அதிகாரிகள் அந்தக்
குறையைக் களைய நடவடிக்கை எடுப்பர்.
இதுவரை சுமார் 14,500 குறுஞ்செய்திகளைப் பொதுமக்கள் அனுப்பியிருந்தனர்.
இவற்றில் பெரும்பாலான குறைகள் ஓரிரு நாள்களில் களையப்பட்டதாக அணையாளர்
க.லதா தெரிவித்தார். மாநகராட்சியில் லஞ்சம் பெறுவது தொடர்பாக குறுஞ்செய்தி
அனுப்பலாமா என்று ஆணையாளர் க.லதாவிடம் கேட்டதற்கு, மாநகராட்சியில் யாராவது
லஞ்சம் கேட்டால் கண்டிப்பாக மாநகராட்சியில் தரப்பட்ட எண்ணுக்குக்
குறுஞ்செய்தி அனுப்பலாம். ஆனால் அச்செய்தியின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு
செய்த பின்தான், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு
தாமதம் ஆகும் என்றும் தெரிவித்தார்.