தினமலர் 23.03.2010
மாநகராட்சி வரி செலுத்த நவீன கருவி
கோவை: மாநகராட்சி அறிமுகம் செய்துள்ள கையடக்க வரி வசூல் கருவியின் உதவியுடன், இனி குடிநீர், சொத்துவரிகளை வீட்டில் இருந்தபடியே செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில சிறப்புத் திட்டங்கள்: மாநகராட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு வெளிப்படையான, நேர்மையான முறையில் மாநகராட்சியில் ஏலம் நடத்த, குத்தகை இனங்களை ‘மின் ஏலம்‘(இ–ஆக்ஷன்) முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட், கட்டண கழிப்பிடம், வாகனம் நிறுத்துமிடங்கள், வருடாந்திர குத்தகை இனங்கள், மாதாந்திர அடிப்படையில் உரிமம் வழங்கப்படும் வணிக வளாகக் கடைகள் முதலிய அனைத்து குத்தகை இனங்களுக்கும் பொது ஏலமுறை ஒப்பந்தப்புள்ளி முறை நடத்தப்பட்டு வந்தது. இது மாற்றப்பட்டு, இந்த ஆண்டு முதல் மின்னணு முறையில் நடத்தப்படவுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சியில் இத்திட்டம் முதன் முறையாக செயல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரி செலுத்த புது வசதி: 100 சதவீத சொத்து வரி, குடிநீர் கட்டணம் வசூல் எனும் இலக்கை அடைய, இனி கையடக்க வரி வசூல் கருவி (ஹேண்ட் பில்லிங் மெஷின்) பயன்படுத்தப்படும். இதன் உதவியுடன் இனி இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும். குடிநீர் கட்டணம் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அதே இடத்தில், கட்டணத்தை வசூலிக்க முடியும். இதனால் இனி பொதுமக்கள் வரி வசூல் மையங்களில் காத்திருந்துசொத்துவரி, குடிநீர் கட்டணங்களை செலுத்த வேண்டாம். வீட்டில் இருந்தபடியே வங்கி கிரெடிட் கார்டு உதவியுடன் கட்டணம் செலுத்தலாம். இக்கருவி மூலம் வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கான ரசீதும் உடனுக்குடன் வழங்கப்படும். இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தும் போது பொது மக்களுக்கு நேரம் மிச்சப்படுவதுடன், அலைச்சலும் தவிர்க்கப்படும்.