மாநகராட்சி வளாகத்தில் வானிலை ஆய்வகம்
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் அளவீடு கருவி அமைக்கப்படவுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இந்த கருவி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள சுதந்திர தின பொன்விழா கட்டடத்தில் ஓரிரு நாள்களில் பொருத்தப்படவுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் வானிலையை முன்கூட்டியே அறியவும், வெயில் மற்றும் மழை அளவுகளை அறியவும் ரிப்பன் கட்டட வளாகத்தில் வானிலை முன்னறிவிப்பு கருவியை பொருத்த இந்திய வானிலை ஆய்வு மையம் முடிவு செய்தது.
இது குறித்து சென்னை மாநகராட்சியிடம் அந்த மையம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே அனுமதி கேட்டது. இந்த நிலையில் மாநகராட்சி அனுமதி அளித்ததையடுத்து கருவியை பொருத்தவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வளாகத்தில் பொருத்தமான இடத்தை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தேடினர். இதில் பொன்விழா கட்டடம் இந்தக் கருவியை பொருத்த ஏற்றதாக இருந்தது.
இந்த கட்டடத்தில் மாநகராட்சி புகார் மையம் செயல்படுவதற்கு ஒரு பிரிவு தயார் செய்யப்பட்டு வந்தது. அந்தப் பிரிவிலேயே முன்னறிவிப்பு கருவியை பொருத்தலாம் என்று ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் வானிலை முன்னறிவிப்பு கருவியை பொருத்த அதற்கான கருவியுடன் ஆய்வு மைய அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை வந்தனர். அப்போது அக்கருவியை பொருத்துவதற்கு தேவையான வயரிங் அமைப்புகள் சரிவர இல்லை என்று கூறி, கருவியை திரும்ப கொண்டு சென்றனர்.
மேலும் இந்த கருவிக்கான வயரிங் (மின் இணைப்பு) அமைப்புகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து வானிலை ஆய்வு அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர். இதனையடுத்து வயரிங் அமைப்புகளை மாற்றியமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாள்களில் முடிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் வானிலை ஆய்வு அதிகாரிகள் நேரில் வந்து கருவியை பொருத்துவார்கள். இந்த கருவியை பராமரிக்கும் பொறுப்பு வானிலை ஆய்வு மையத்திடமே இருக்கும். இதன் மூலம் சென்னையின் வானிலையை துள்ளியமாக கணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் ஆகியவற்றில் வானிலை ஆய்வகங்கள் உள்ளன.