தினமலர் 27.03.2010
மாநகராட்சி வார்டுகளை பிரிக்க விரைவில் குழு
வேலூர்‘வேலூர் மாநகராட்சி புதிய எல்லைகளின்படி வார்டுகளை பிரிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.வேலூர் மாநகராட்சியின் புதிய எல்லைகளை சமீபத்தில் அரசு அறிவித்தது. இதன்படி 3 நகராட்சிகள், 3 மூன்றாம் நிலை நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 பஞ்சாயத்துக்கள் சேர்த்து வரும் 2011ம் ஆண்டு முதல் விரிவுப்படுத்தப்பட்ட புதிய மாநகராட்சி செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.மாநகராட்சியை 72 வார்டுகளாக பிரித்து, நிர்வாக வசதிக்காக 4 மண்டல அலுவலகங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.புதிய எல்லைகள் பிரிப்பது குறித்து நகராட்சிகள் கூடுதல் இயக்குனர் சந்திரசேகர் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், வார்டுகள் பிரிக்கும்போது அதிகாரிகள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுந்தப்பட்டுள்ளது. எல்லை பிரிப்பதற்காக நகராட்சி, பேரூராட்சி செயல் அலுவலர்கள், உள்ளாட்சி சார்பில் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.புதிய குழுக்கள் அமைத்தவுடன் வார்டுகள் பிரிப்பது குறித்து முடிவு செய்ய ஏப். 6ம் தேதி சிறப்பு நகராட்சிகள் மண்டல இயக்குனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வார்டுகள் பிரிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.