தினமணி 02.07.2013
தினமணி 02.07.2013
மாநகராட்சிக்கு வரி நிலுவை வைத்திருப்போர் பட்டியல்: பொது இடங்களில் வைக்க ஏற்பாடு
திருநெல்வேலி மாநகராட்சியில் அதிக வரி நிலுவை
வைத்திருப்போர் பெயர்ப் பட்டியல் பொது இடங்களில் மக்கள் பார்வைக்கு
வைக்கப்படுமென மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) த. மோகன் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சிக்கு 2013-14-ம் ஆண்டின் முதலாம் அரையாண்டிற்கான
சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர்க் கட்டணம், தொழில் வரி மற்றும் பாதாள
சாக்கடை சேவைக் கட்டணம் ஆகியவற்றினை செலுத்துவதற்கான கடைசி தேதி 15.4.2013
ஆகும்.
நிகழ் ஆண்டு மற்றும் முந்தைய ஆண்டுகளுக்கான வரியினை செலுத்தாமல் நிலுவை
வைத்துள்ள நிலுவைதாரர்களின் சொத்துக்கள் மீது ஜப்தி மற்றும் குடிநீர்
இணைப்பு துண்டிப்பு முதலான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
எனவே, நிலுவை மற்றும் நிகழ் அரையாண்டுக்கான சொத்துவரி, காலிமனை வரி,
குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை மற்றும் பாதாள சாக்கடை சேவைக்
கட்டணம் ஆகியவற்றினை 15.7.2013-க்குள் மாநகராட்சி கணினி வரிவசூல்
மையங்களில் செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிப்பு முதலான
சட்டரீதியான நடவடிக்கையினை தவிர்த்திட நிலுவைதாரர்களுக்கு
தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலக் கெடுவுக்கு பின்னரும் அதிகமாக நிலுவை வைத்துள்ள
நிலுவைதாரர்களின் பெயர் பட்டியல் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்கள்
மற்றும் மாநகரின் முக்கிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்படும். மேலும்,
நாளிதழ்களிலும் வெளியிடப்படும் என்று செய்திக்குறிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது.