மாநகராட்சிப் பள்ளிகள், சுகாதார மையங்கள் தரம் உயர்த்தப்படும்
கோவை மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என, தேர்தல் பிரசாரத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சி.பத்மநாபன் வாக்குறுதியளித்தார்.
கோவை மாநகராட்சி இடைத்தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.பத்மநாபன், கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மாநகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து துவங்கிய பிரசாரப் பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஜீவா துவக்கி வைத்தார்.
அரவன் திடல் மைதானத்தில் வேட்பாளர் பத்மநாபன் பேசியதாவது:
கோவை மாநகராட்சி மன்றம் கடந்த மூன்று ஆண்டு காலமாக மக்கள் பிரச்னைகளைப் பேசாத மன்றமாகச் செயல்பட்டு வந்துள்ளது. மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலை காணப்படுகிறது. மேலும், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலை உள்ளது.
எனவே, மாநகராட்சி சுகாதார மையங்களை நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதனால், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, செயற்குழு உறுப்பினர் வி.பெருமாள், ஒன்றியச் செயலாளர் கேசவமணி, மதச்சார்பற்ற ஜனதா தளம் மாவட்டச் செயலாளர் கே.என்.அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.