தினகரன் 26.10.2010
மாநகராட்சியின் புதிய நிபந்தனையால் புது வீடு கட்டுவதில் சிக்கல்
நெல்லை, அக். 26: வீடு கட்ட பிளான் அனுமதி வேண்டு வோர் 18 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என நெல்லை மாநகராட்சி புதிய நிபந்தனைகளை பிறப்பித்துள்ளது. இதனால் வீடு கட்டுவோர் பிளான் அப்ரூ வல் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
மாநகராட்சி பகுதிகளில் வீடு கட்டுவோர் முன்பு வீட்டு பிளான்களுடன் ஓரிரு ஆவணங்களை சமர்ப்பித்து ஒரு வார காலத்திற்குள் அனு மதி பெற்று வந்தனர். கடந்த இரு வாரத்திற்கு முன்பு மாநகராட்சி வீடு கட்ட பிளான் அப்ரூவல் பெற 18 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் வீடு கட்டுவோர் அனுமதி பெறமுடியாமல் தவிக்கின்றனர்.
வீட்டு மனை விண்ணப்பத்தோடு நோட்டரி பப்ளிக் அத்தாட்சி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தர வால் வீடு கட்ட விரும்புவோ ரும், கான்ட்ராக்டர் களும் தற்போது வக்கீல் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதுள்ளது.
கிராம நிர்வாக அதி காரி மற்றும் நகர சர்வேயர் அத்தாட்சி செய்த வீட்டுமனையின் வரைபடம், வீட்டுமனையின் சிட்டா மற்றும் ரிஜிஸ்டர் பட்டா, 15 ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ், வீட்டு மனை உரிமையாளர் குறித்து அரசாங்க வக்கீலிடம் இருந்து அசல் சான்றிதழ், குடிநீர் வசதி குறித்து ரூ.20 அரசு முத்திரை தாளில் உறுதி மொழி என மாநகராட்சியின் புதிய நிபந்தனைகள் வீடு கட்டுவோரை தலைசுற்ற வைக்கின்றன.
இதில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டிய மனையாக இருந்தால், வீடு கட்டுவோர் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை துறைகளிடம் வீடு கட்ட தடை யில்லா சான்றிதழ் பெறவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒரு விதிமுறை யில் சூரிய அடுப்பு குறித்த வரைபடம் இருக்க வேண்டும் என கூறுகிறது. நெல்லை, பாளையில் 2 சென் டில் வீடு கட்டுவோர் சூரிய அடுப்புக் கான ஏற்பாடுகளை எவ்வாறு செய்வது என கேள்வி எழுப்பி வருகின்ற னர். மாநகராட்சியின் இத்திட்டத்திற்கு கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர்.
மண்டல தலைவர்கள் எதிர்ப்பு நிபந்தனை தளர்த்தப்படுமா?
இதுகுறித்து பாளை மண்டல தலைவர் சுப.சீதாராமன் விடுத்திருக்கும் அறிக்கையில்,” மாநகராட்சி பகுதிகளில் வீட்டு பிளான்களுடன் பொதுமக்கள் வழங்க வேண்டிய ஆவணங்கள் பொதுமக்களை அதிகளவில் பாதிக்கும். மாமன்றத் தின் ஒப்புதல் இன்றியும், கவுன்சிலர்களுக்கு தெரியாமலும் இந்நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பழைய வீட்டை இடிக்க வேண்டுமானால் அதற்கு தனிக்கட்டணம் உள்ளிட்ட சில நடைமுறைக்கு ஒவ்வாத நிபந்தனைகளை கமிஷனர் விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை தளர்த்தி, மாநகராட்சி கட்டிட விதிமுறைகளில் உள்ள விதிகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி விதித்திருக்கும் புதிய நிபந்தனைகளால், வீடு கட்டுவதை விட, வீடு வாங்குவதே மேல் என்ற எண்ணத்திற்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.