தினகரன் 12.08.2010
மாநகராட்சியின் லேப் ஊழியர் இடமாற்ற முடிவு மறுபரிசீலனை செய்ய உத்தரவு
புதுடெல்லி, ஆக. 12: மாநகராட்சி ஆய்வகங்களில் பணியாற்றும் ஊழியர்களை மற்ற துறைக்கு இடமாற்றம் செய்யு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் கேட்டுக் கொண்டுள்ளது. மாநகராட்சி ஆய்வகத்தில் பணியாற்றிய பிரதீப் கபூர் மற்றும் சில ஊழியர்கள் இணைந்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் முறையீடு செய்திருந்தனர். அதில், மாநகராட்சியில் 2007ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்தில், லேப் ஊழியர்களை மற்ற துறைகளுக்கு இடமாற்றம் செய்வது என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம், யோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவாகும். இதனால் இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த முறையீடு மத்திய தீர்ப்பாய உறுப்பினர்கள் எஸ்.ராஜூ மற்றும் வீணா சோத்ரே ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் விதத்தில்தான் பொறியாளர்கள் அல்லாத மற்ற ஊழியர்களை பிற துறைகளுக்கு இடமாற்றும் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. இது முழுமையாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு” என்று கூறப்பட்டிருந்தது.
தீர்ப்பாய உறுப்பினர்கள் வெளியிட்ட உத்தரவில், “ஆய்வக ஊழியர்களை இடமாற்றம் செய்யும் முடிவை மாநகராட்சி மறுபரிசீலனை செய்யலாம். ஆனால், இப்பிரச்னையில் மாநகராட்சியின் முடிவில் தலையிட தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை. ஆய்வகங்களின் மேம்பாட்டுக்கு எது முக்கியமோ அதை கவனத்தில் கொண்டு மாநகராட்சி செயல்படுகிறது. இதனால் தீர்ப்பாயம் இதில் தலையிட முடியாது” என்றனர்.