மாநகராட்சியில் சதமடித்த சேதுபதி பாண்டித்துரை பள்ளி
மதுரை மாநகராட்சி பள்ளிகளில், சேதுபதி பாண்டித்துரை பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றதன் மூலம் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
மதுரை மாநகராட்சியிலுள்ள 14 மேல்நிலைப் பள்ளிகளில் 574 மாணவர்களும், 1,909 மாணவிகளும், ஆக மொத்தம் 2,483 பேர் தேர்வு எழுதினர். இதில், 358 மாணவர்களும், 1,954 மாணவியரும், ஆக மொத்தம் 2,312 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.11.
சேதுபதி பாண்டித்துரை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 41 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியுடன் மாநகராட்சி அளவில் முதலிடம் பிடித்துள்ளது. திரு வி.க. மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 246 பேரில் 244 பேரும் (தேர்ச்சி விகிதம் 99.19) தேர்ச்சி பெற்றதன் மூலம் இரண்டாவது இடத்தையும், பொன்முடியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 141 பேரில் 139 பேரும் (தேர்ச்சி விகிதம் 98.58) தேர்ச்சி பெற்று மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
மாசாத்தியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி 98.44 தேர்ச்சி விகிதமும், கம்பர் இருபாலர் மேல்நிலைப் பள்ளி 98.31 தேர்ச்சி விகிதமும், வெள்ளிவீதியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி 96.77 தேர்ச்சி விகிதமும், காக்கைபாடினியார் மேல்நிலைப் பள்ளி 93.38 தேர்ச்சி விகிதமும், ஈவெரா நாகம்மையார் மகளிர் மேல்நிலைப் பள்ளி 93.10 தேர்ச்சி விகிதமும், பாரதிதாசனார் மேல்நிலைப் பள்ளி 90.57 தேர்ச்சி விகிதமும் பெற்றுள்ளன.
இதில், அவ்வை மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி டி. மீனலோசினி 1,158 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடத்தையும், வெள்ளிவீதியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். ஜோதி 1,147 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், இதே பள்ளி மாணவி எஸ். ஜெயலட்சுமி 1,122 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர்.