தினமணி 16.08.2010
மாநகராட்சியில் சுதந்திர தினக் கொண்டாட்டம்: தேர்வில் சிறந்த மாணவிகளுக்கு இலவச கணினி
மதுரை, ஆக 15: மதுரை மாநகராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி அண்ணா மாளிகை முன் மேயர் கோ.தேன்மொழி தேசியக் கொடியேற்றினார். விழாவில் ரூ.8.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு முதன்முறையாக மாநகராட்சி சார்பில் இலவச கணினிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மேயர் கோ. தேன்மொழி பேசியது:
மதுரை மக்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இயக்குதல் மற்றும் பராமரித்தல் திட்ட நிதி உதவியின் கீழ் ரூ.8.30 கோடியில் நவீன முறையில் தத்தனேரி மயானம் பராமரிப்பு, வெள்ளைக்கல் குப்பை மையத்திலுள்ள பழங்கால கட்டடங்களை சீரமைத்தல், பெரியார் பஸ் நிலையத்தை நவீனப்படுத்துதல், குடிநீரேற்று நிலையங்களுக்கு ஜெனரேட்டர் வசதி போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அனுப்பானடியில் ரு.3.90 கோடியில் நவீன ஆடு வதைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிப் பள்ளிகள் வளர்ச்சியிலும், கல்வித்தரத்தை உயர்த்துவதிலும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநகராட்சி பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.பரமேஸ்வரி புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று மாநகராட்சிக்கு பெருமை சேர்த்துள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில் மூவலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு ரூ.41.60 லட்சத்துக்கான காசோலைகள், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 6 மாணவிகளுக்கு முதன்முறையாக கணினிகளை மேயர் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கமிஷனர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் பி.எம்.மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல் நன்றி கூறினார். மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.