மாநகராட்சியில் நவீன புகார் மையம் இன்று திறப்பு
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் நவீன புகார் மையம் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் பொதுமக்கள் புகார் பிரிவு செயல்பட்டு வந்தது.
இந்தப் பிரிவில் 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் சாலைப் பிரச்னைகள், வரிகள், சான்றிதழ்கள் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான புகார்களை தெரிவித்து வந்தனர். இந்தப் புகார் பிரிவில் ஒரு கணினி மட்டுமே இருந்தது.
இந்த நிலையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள சுதந்திர தின பொன்விழா அரங்கில் நவீன புகார் பிரிவு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போது இந்தப் பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி இதனை திங்கள்கிழமை திறந்து வைக்கிறார்.
இந்தப் பிரிவில் 10 கணினிகள் பயன்படுத்தபடவுள்ளன. மேலும் இதில் ஷப்ட் முறையில் 23 அலுவலர்கள் பணியாற்றுவர். பொதுமக்கள் கூறும் புகார்களை கணினியில் பதிந்து, அதற்கான பதிவு எண்ணையும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிப்பார்கள். இந்த எண் மூலம் புகார் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறியலாம்.
இந்தப் பிரிவில் உள்ள தொலைபேசிகள் கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும். புகார் பிரிவில் உள்ள அலுவலர்கள் இணைப்பை துண்டிக்க முடியாது. தொலைபேசியில் நடைபெறும் உரையாடல்கள் பதிவு செய்யப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.