தினமலர் 18.02.2010
மாநகராட்சியுடன் இணைப்பு: நாகமலை புதுக்கோட்டை பகுதி மக்கள் கருத்து
சென்னையைச் சுற்றியுள்ளபல்வேறு நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து, அம்மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளையும் சேர்த்து அதே போல விரிவுபடுத்தும் திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. மதுரை மாநகராட்சியுடன் இணைந்தால், நிதி ஒதுக்கீடு அதிகம் கிடைக்கும். பாதாள சாக்கடை, புதிய சாலை, தெரு விளக்குகள், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் கிடைக்கும்.மதுரை மாநகராட்சியுடன் நாகமலைபுதுக்கோட்டையை இணைப்பது குறித்து இப்பகுதி மக்களின் கருத்து. என்.ஜி.ஓ., காலனி குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் கந்தன்(65): நாகமலைபுதுக்கோட்டை பகுதியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க கோரி சில ஆண்டுகளுக்கு முன்பே குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மதுரை கலெக்டருக்கு பரிந்துரை மனு அனுப்பியுள்ளோம். மாநகராட்சியுடன் இணைத்தால் நல்ல நிர்வாகம் கிடைக்கும். குடிநீர், பாதாள சாக்கடை போன்றவற்றில் ரூ.பல கோடியில் பெரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். ஊராட்சி மன்றத்தால் இது முடியாது. ஐ.டி. பார்க் போன்று நிறைய கம்பெனிகள் தொழில் துவங்க முன் வருவர். உலகவங்கி போன்றவற்றின் நிதியுதவியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
விலைவாசி, வீட்டு வாடகை உயருதல் போன்ற சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் நன்மையே அதிகம். *பெண்கள் நலச்சங்க நிர்வாகி சாந்தி(50): மாநகராட்சியுடன் இணைத்தால் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள், கல்வி, பெண்கள்முன்னேற்றம், வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கிராம ஊராட்சியாக இருப்பதால் பெரியதொழில்கள் இல்லை. மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். ரேஷன் வினியோகம் முதல் அனைத்தும் சரியாக நடக்கும். குறைகளை களைய அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பர்.*ஓய்வு பெற்ற பேராசிரியர் வின்சென்ட்(58): ஊராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்த கோரிக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே நிறைவேறுகிறது. தற்போது குப்பைகள், கொசு ஒழிப்பு போன்றவை தாமதமாகின்றன. மாநகராட்சியுடன் இணைந்தால் அனைத்து வசதிகளும் கிடைக்கும்.*அண்ணாத்துரை(40): மாநகராட்சியுடன் இணைந்தால் மக்கள் நெருக்கம், சாக்கடை நீர் தெருவில் ஓடுவது போன்ற சுகாதாரக்கேடுகள் ஏற்படும். தற்போது குறைகளை ஊராட்சி மன்றத்தில் கூறுகிறோம். மாநகராட்சியுடன் இணைந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்வது சிரமம். *விருமன்(38): 10 ஆண்டுகளாக இத்திட்டத்தை எதிர்பார்க்கிறோம். மார்க்கெட், நல்ல குடிநீர், சாக்கடை வசதிகள், கொசுத்தொலை ஒழிப்பு, புதிய வீடுகளுக்கு லே–அவுட் அப்ரூவல், கட்டங்கள் முறைப்படுத்துதல், மருத்துவ வசதிகள் போன்ற வசதிகள் கிடைக்கும். *சேது(30): தற்போது ரோடு, சாக்கடை வசதிகள் செய்து தருமாறு கோரிக்கை விடுத்தால் பல ஆண்டுகளுக்கு பின்னரே நிதி ஒதுக்கப்படுகிறது. மாநகராட்சியுடன் இணைத்தால் இந்நிலை மாறும்.