தின மலர் 27.02.2013
மாநகரில் காட்சி பொருளான சிக்னல்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?
சென்னை: மாநகரில் பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்ட சிக்னலில் பெரும்பாலானவை, செயல்படாமல் கிடப்பதால், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய நுழைவாயிலில், காளியம்மன் கோவில் சாலை – சந்தை சாலை சந்திப்பில், மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த வழித்தடத்தில், மெட்ரோ ரயில் திட்டப் பணி மற்றும் கோயம்பேடு சந்தை சாலை உள்ளிட்ட பணிகளுக்காக, போக்குவரத்து மாற்றம் செய்து இருந்தனர்.இதன் காரணமாக, அப்பகுதியில் சிக்னலின் இயக்கம் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளை முறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தற்போது, பணி முடிந்துள்ள நிலையில், இந்த சிக்னலை மீண்டும் இயக்காமல், அப்படியே விடப்பட்டு உள்ளது.இதே போல, விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், அவிச்சி பள்ளி அருகே, பாதசாரிகள் சாலையை கடக்க அமைக்கப்பட்ட சிக்னல், இயக்கப்படாமல் உள்ளது. ஆண்டுக்கணக்கில் இயக்கப்படாமல் கிடக்கும், இந்த சிக்னல் பகுதியில், விபத்து பயத்துடனேயே பாதசாரிகள் கடந்து செல்ல வேண்டி உள்ளது.
இதே போல், கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கு முன்பாக, காவல் சேவை மையம் எதிரே, பாதசாரிகள் கடப்பதற்காக, போடப்பட்ட சிக்னலும் செயல்படுவதில்லை.இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் தரப்பில் கூறுகையில், “கோயம்பேட்டில் கேபிள்கள் பழுதால், பழுதை நீக்குவதற்கு, மின்வாரியத்திடம் கோரியுள்ளோம். பழுது சரி செய்த பின், சிக்னல் இயக்கப்படும். மற்றபடி, மாநகரில் பெரும்பாலான இடங்களில், பாதசாரிகள் கடப்பதற்காக போடப்பட்ட சிக்னல்கள், செயல்படாமல் தான் கிடக்கின்றன,” என்றனர்.