தினமலர் 13.04.2010
மின் தடையால் வந்தது ‘திருகுவலி‘ : குடிநீர் சப்ளையும் கடும் பாதிப்பு : குறிச்சி நகராட்சி மக்கள் பரிதவிப்பு
கோவை : சிறுவாணி, ஆழியாறு குடிநீர் திட்டங்கள் இருந்தும் குறிச்சி நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பத்து நாட்களுக்கு ஒரு முறை இரண்டு மணி நேரம் மட்டுமே குடிநீர் சப்ளையாவதால், மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.கோவை மாநகராட்சி எல்லையிலுள்ள குறிச்சி நகராட்சியின் 21 வார்டுகளில் 1.3 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகருக்கு மிக நெருக்கமான பகுதி என்பதாலும், சிறுதொழிற்சாலைகள் நிறைந்த ‘சிட்கோ‘ வளாகம் இருப்பதாலும், புதிதாக தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் துவக்கப்படுவதாலும் இந்த நகராட்சியில் எண்ணற்ற நகர்கள், ‘லே – அவுட்‘கள் முளைத்துள்ளன. இதனால், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. ஆனால், அகற்கேற்ப குடிநீர் வினியோகம் இல்லை. இந்நகராட்சி மக்களுக்கு கடந்த ஆண்டு வரை சிறுவாணி குடிநீரே பிரதானமாக இருந்தது. குடிநீர் தேவை அதிகரித்துக்கொண்டே போனதால், புதிதாக ஆழியாறு குடிநீர் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், 10 நாட்களுக்கு ஒரு முறை, இரண்டு மணி நேரம் மட்டுமே வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.காரணம் என்ன?: குறிச்சி நகராட்சிக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தினமும் 40 லட்சம் லி., சிறுவாணி குடிநீரை சப்ளை செய்ய வேண்டும். ஆனால், 4.5 லட்சம் லி., குறைவாகவே சப்ளை செய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள சிறுவாணி அணையில் இருந்து வழங்கப்படும் குடிநீர் குனியமுத்தூர் வழியாக சுந்தராபுரம், சாரதாமில் ரோடு மற்றும் செட்டிபாளையம் ரோட்டிலுள்ள மேல்நிலை தொட்டிகளுக்கு வந்து, அங்கிருந்து குடியிருப்புகளுக்கு சுழற்சி முறையில் சப்ளையாகிறது. முன்பு, வாரம் ஒரு முறை வினியோகிக்கப்பட்ட குடிநீர் தற்போது, 10 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு மணி நேரம் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. மாற்று வழியில்லாத நிலையில், மக்கள் காலி குடங்களுடன் குடிநீருக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பற்றாக்குறையாக வரும் நீரை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலமாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக, நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.
கைகொடுக்காத ஆழியாறு திட்டம்: பொள்ளாச்சி, ஆழியாறு அணையில் இருந்து எடுக்கப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு ஆத்துப்பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டி, கிணத்துக்கடவு பகுதிகளிலுள்ள ‘பம்ப்பிங் ஸ்டேஷன்‘ மூலமாக குறிச்சி நகராட்சிக்கு தினமும் சப்ளையாகிறது. இந்த குடிநீர் வினியோகத்தையும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே மேற்கொள்கிறது. ‘சிறுவாணி குடிநீர் சப்ளையின் பற்றாக்குறையை ஆழியாறு திட்டம் போக்கும்‘ என்ற நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது; காரணம், மின்தடை. தினமும் மூன்று மணி நேர மின்தடை அறிவிப்பு காரணமாக ஆத்துப்பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டி, கிணத்துக்கடவிலுள்ள ‘பம்ப்பிங் ஸ்டேஷன்களை‘ இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தினமும் 24 மணி நேரமும் சப்ளையாக வேண்டிய ஆழியாறு குடிநீர், 8- 10 மணி நேரம் வரை மட்டுமே சப்ளையாகிறது. இதனால், 35 லட்சம் லி., சப்ளையாவதற்கு பதிலாக 20 லட்சம் லி., குடிநீரே நகராட்சிக்கு வருகிறது. ஏற்கனவே, சிறுவாணி அணையில் இருந்து 4..5 லட்சம் லி., பற்றாக்குறையாக குடிநீர் சப்ளையாகி வரும் நிலையில், ஆழியாறு திட்ட குடிநீரும் மின் தடை காரணமாக 15 லட்சம் லி., குறைந்ததால், நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணாவிடில், மக்களின் கடும் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமே என்ற கவலையில் ஆழ்ந்துள்ளது, குறிச்சி நகராட்சி நிர்வாகம்.
இது குறித்து, நகராட்சி தலைவர் பிரபாகரன் கூறியதாவது: சிறுவாணி, ஆழியாறு குடிநீர் திட்டங்கள் மூலமாக குறிச்சி நகராட்சிக்கு தினமும் 90 லட்சம் லி., குடிநீர் சப்ளையாக வேண்டும். ஆனால், 20 லட்சம் லி., குறைவாகவே கிடைக்கிறது. இதன் காரணமாகவே 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடிகிறது. ஆழியாறு திட்ட குடிநீர் சப்ளைக்காக ஆத்துப்பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டி, கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள ‘பம்ப்பிங் ஸ்டேஷன்கள்‘ சரிவர இயங்குவதில்லை. ஒவ்வொரு பம்ப்பிங் ஸ்டேஷன் பகுதியிலும் மின் தடை நேரம் மாறுவதால், குடிநீர் குறிச்சி நகராட்சிக்கு வந்து சேருவதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து, மின்வாரிய உயரதிகாரிகளிடம் முறையிட்டுள்ளோம். மேற்கண்ட மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் மின் தடை ஏற்படும் வகையில் மாற்றியமைத்தால், குடிநீர் பம்ப்பிங் செய்யப்பட்டு சப்ளை ஆவதில் பிரச்னை இருக்காது. குடிநீர் சப்ளையை சரிவர மேற்கொள்ள மின்வாரியம் உதவ வேண்டும்.இவ்வாறு, பிரபாகரன் தெரிவித்தார்.
குடிநீரில் புழுக்கள்: குறிச்சி நகராட்சியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படுவதால், பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டியுள்ளது. பத்து நாள் வரை சேமித்து வைக்கும் போது குடிநீரில் புழுக்கள் நெளியத் துவங்கி விடுகின்றன. பருக முடியாமல் பரிதவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, கூடுமானவரை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது குடிநீர் சப்ளை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாகும்.
குனியமுத்தூர், மதுக்கரை பகுதிகளிலும் தட்டுப்பாடு: குறிச்சி நகராட்சியை போன்றே குனியமுத்தூர் நகராட்சி மற்றும் மதுக்கரை, வெள்ளலூர் பேரூராட்சிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மதுக்கரை, மாவுத்தம்பதி கிராம பெண்கள் சமீபத்தில் காலி குடங்களுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். அதன் பிறகும் கூட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடையும் பட்சத்தில் மக்கள் அதிருப்தியடைந்து போராட்டங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகள் இப்போதே விழித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்வது அவசியம