தினமலர் 28.01.2010
மின்சார சேமிப்பில் சிக்கனம்: மாநகராட்சி அதிகாரிக்கு சான்று
சென்னை : மின்சார சேமிப்பில் சிக்கனத்தை கடைபிடித்த மாநகராட்சி மண்டல அலுவலருக்கு குடியரசு தின விழாவில் மேயர் சான்று வழங்கினார்.சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் குடியரசு தின விழாவில் மேயர் சுப்ரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சாரணியர் மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மேயர், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூபாய் 60 ஆயிரமும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு தலா 20 ஆயிரமும் வழங்கினார்.
மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலகங்களில் மின்சார சிக்கனத்தை கடைபிடித்த அயனாவரம் மண்டல அதிகாரி பூமிநாதன், பன்றிக் காய்ச்சல், சிக்–குன்– குனியா நோய் பரவிய காலத்தில் சிறந்த மருத்துவ சேவை புரிந்தமைக்கு தண்டையார் பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் லட்சுமி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அது போல், மாநகராட்சியில் பல துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 15 அலுவலர்களுக்கு மேயர் சான்றுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர் கட்சித் தலைவர் சைதை ரவி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.