மீண்டும் ஆக்கிரமித்தால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
திருவண்ணாமலை நகரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என்று கோட்டாட்சியர் தி.காசி கூறினார்.
திருவண்ணாமலை நகரை அழகுப்படுத்தும் நகரமைப்புக் குழுக் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற புதன்கிழமை இரவு நடைபெற்றது. இக் கூட்டத்தில் தி.காசி பேசியதாவது:
திருவண்ணாமலை நகரச் சாலைகளில் உள்ள நடைபாதையை ஆக்கிரமிப்பவர்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற லட்சக்கணக்கில் செலவாகிறது. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாகப் புகார்கள் வருகின்றன.
எனவே, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை மீண்டும் ஆக்கிரமிக்கும் நபர்கள் குறித்து பொதுமக்கள், ஆட்சியருக்குப் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.