தினமணி 01.04.2010
மீண்டும் தியாகிகள் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு வரவேற்பு
தஞ்சாவூர், மார்ச் 31: பட்டுக்கோட்டையில் நகராட்சி சார்பில் இடிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் நினைவுச் சின்னத்தை மீண்டும் அமைப்பதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் இரா. திருஞானம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பட்டுக்கோட்டை நகரில் 1950-ல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், ஜாம்பவானோடை சிவராமன் ஆகியோர் அன்றைய அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் பட்டுக்கோட்டையில் நினைவுச் சின்னம் அமைத்து ஆண்டுதோறும் மே 5-ம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது.
அண்மையில் இந்த நினைவுச் சின்னங்களை பட்டுக்கோட்டை நகராட்சி இடித்து அப்புறப்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்து மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
நகராட்சி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததுடன், மீண்டும் நினைவுச் சின்னம் கட்டிக்கொடுக்க முன்வந்திருப்பதும் வரவேற்கக்கூடியது.
மீண்டும் நினைவுச் சின்னம் அமைய போராடிய அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, மக்கள் கலை இலக்கியக் கழகம், ஆதிதிராவிடர் நல முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.