தினமலர் 03.05.2010
மீனம்பாக்கம் சுரங்கப்பாலத்திற்கு விமோசனம்
ஆலந்தூர் : ‘தினமலர்‘ செய்தியை அடுத்து, புதிதாக கட்டிய மீனம்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாலத்தை பராமரிக்க ஆலந்தூர் நகராட்சி ஒப்புதல் வழங்கியது. ஆலந்தூர் நகராட்சித் தலைவர் துரைவேலு தலைமையில், நகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில், காங்., கவுன்சிலர் வினோதினி பேசுகையில், ’22வது வார்டில் ஏழு கிரவுண்டு 25 சென்ட் நிலத்தில் விளையாட்டுத் திடல் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க கலெக்டர் ராஜாராம், 2002ம் ஆண்டு உத்தரவிட்டார். ‘பல ஆண்டுகளாகியும் நகராட்சி கையகப்படுத்த தயக்கம் காட்டி வருகிறது. அந்த இடத்தை ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நகராட்சி நிர்வாகம் மீட்க வேண்டும்‘ என்றார்.
கவுன்சிலர்கள் பேசும்போது, ‘புதிதாக கட்டிய மீனம்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாலம், பராமரிப்பதில் மீனம்பாக்கம் ஊராட்சி, கன்டோன்மென்ட் மற்றும் ஆலந்தூர் நகராட்சியிடையே பனிப்போர் நிலவி வருவதாக, ‘தினமலர்‘ படத்துடன் செய்தி வெளியிட்டது‘ என சுட்டிக்காட்டினர்.
தி.மு.க., கவுன்சிலர் முத்து பேசுகையில், ‘பல கோடி ரூபாய் மதிப்பில் ஆலந்தூர் நகராட்சியில் பல இடங்களில் வாட்டர் டேங்க்குகள் கட்டப்படுகின்றன. பொதுமக்களுக்கு திட்டம் குறித்து விளக்கும் வகையில் போர்டுகள் ஆங்காங்கே அமைக்க வேண்டும். இதனால், பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை பொறுத்துக் கொள்வர்‘ என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சித் தலைவர் துரைவேலு, ‘மீனம்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாலத்தை இனிமேல் ஆலந்தூர் நகராட்சி நிர்வாகமே பராமரிக்கும்‘ என்றார்.