தினமலர் 21.09.2010
முக்கிமலை கிராம மக்களுக்கு நீர் இணைப்பு : பேரூராட்சி செயல் அலுவலர் உறுதி
மஞ்சூர் : “”முக்கிமலை கிராம மக்களுக்கு, விரைவில் தண்ணீர் இணைப்பு வழங்கப்படும்,” என, செயல் அலுவலர் உறுதியளித்துள்ளார்.
பிக்கட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முக்கிமலை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தை சேர்ந்த சிலர், வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு வேண்டி, 1997ம் ஆண்டு விண்ணப்பம் அளித்து 700 ரூபாய் டெபாசிட் தொகை செலுத்தினர்; இதுவரை தண்ணீர் இணைப்பு வழங்கவில்லை. இப்பகுதியை சேர்ந்த சுகுமாறன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம் கேட்டு மனு அனுப்பினார்.
மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து, இணைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், பிக்கட்டி பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இரு மாதங்களுக்கு முன், தண்ணீர் இணைப்புக்காக 2,650 ரூபாய் டெபாசிட் தொகை, சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்கப்பட்டது; இதுவரை வழங்காததால், கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட மாதாந்திரக் கூட்டத்தில், செயல் அலுவலர் ஜெயராமிடம், விண்ணப்பித்தவர்கள் விளக்கம் கேட்டனர்.
செயல் அலுவலர் ஜெயராம் கூறுகையில், “”தண்ணீர் இணைப்பு வேண்டி விண்ணப்பித்த முக்கிமலை கிராம மக்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இணைப்பு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.