தினமலர் 22.01.2010
முட்புதர்களில் அமைத்த பன்றிகள் கூடாரம் அகற்றம் : வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் அதிரடி
வாணியம்பாடி : வாணியம்பாடி ஆற்றுப்பகுதியில், முட்புதர்களில் இருந்த பன்றிகள் கூடாரத்தை அகற்றி நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
வாணியம்பாடி நகரின் இடைப்பகுதியில் செல்லும் பாலாற்றின் கிளை ஆற்றில் ஆங்காங்கே முட்புதர்கள் வளர்ந்துள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு முட்புதர்களுக்குள் வழி ஏற்படுத்தி, அங்கு கூடாரம் போல் அமைத்து அதில் பன்றிகள் வளர்க்கப்பட்டு வந்தது. இதனால் நாளுக்குநாள் நகரில் பல இடங்களில் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
பள்ளிக்கூடங்கள், கோயில்கள் உட்பட பல பகுதிகளில் பன்றிகள் நடமாட்டத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க கோரி, நகராட்சி அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து, நகராட்சி தலைவர் சிவாஜிகணேசன் ஆலோசனையின் பேரில், நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் நகர் நல அலுவலர் பிரியா மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், நடராஜன் ஆகியோர் நடத்திய ஆய்வில் முட்புதர்களில் கூடாரம் அமைத்து பன்றிகள் வளர்ப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த கூடாரத்தை நகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினர். கூடாரம் அமைத்து பன்றிகள் வளர்ப்பது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி துப்புரவு அதிகாரிகள் கூறுகையில், “ஆற்றுப்பகுதியில் முட்புதர்களில் மறைவாக கூடாரம் போட்டு பன்றிகள் வளர்க்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கூடாரம் உள்ள இடத்தை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி தொடர்ந்து நடக்கும். மேலும், பன்றிகளை பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு போய் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பன்றிகள் வளர்த்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது‘ இவ்வாறு அவர்கள் கூறினர.