முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம்:தமிழக முதல்வர் ஜெ., விற்கு நன்றி தெரிவித்து நகராட்சிக் கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விழுப்புரம் நகராட்சியின் அவசரக் கூட்டம் நடந்தது. சேர்மன் பாஸ்கரன் தலைமை தாங்கினார். நகராட்சிப் பகுதியில் பிற்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கான மான்ய நிதி (2013-2014) திட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைத்தல், புதிய தார் சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி மையம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் புதிய கழிவறைகள் கட்டுதல் உள்ளிட்ட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அ.தி.மு.க., தலைமையிலான தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளுக்கு முதல்வர் ஜெ., விற்கு நன்றி தெரிவித்தும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன், இன்ஜினியர் பார்த்தீபன், வருவாய் ஆய்வாளர் சாம்ராஜ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.