முறைகேடாக தண்ணீர் விற்பனை மாவட்டம் முழுவதும் ஆழ்குழாய் கிணறு ரெய்டு தீவிரம்
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் கடும் வறட்சி நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள குளங்கள் வறண்டுவிட்டன. சமீபத்திய ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் கோவை மாவட்டம் சிக்கி தவிக்கிறது. கால்நடைகளுக்கு தீவனம் அறுவடை செய்யக்கூட வழியில்லாத அளவுக்கு புற்கள் காய்ந்துகிடக்கின்றன. குளங்கள் வறண்டுவிட்டதால் நிலத் தடி நீர்மட்டம் குறைந்து, பெரும்பா லான ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இதை பயன்படுத்திக்கொண்டு ஒருசிலர் தங்களது ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்கின்றனர்.
மினி லாரி தண்ணீர் 500 ரூபாய், பெரிய லாரி தண்ணீர் 1,500 ரூபாய் என தங்கள் இஷ்டத்துக்கு விற்பனை செய்கின்றனர். மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெற்று ஆழ்குழாய் கிணறு அமைக்காமல், சட்ட விரோதமாக இச்செயலில் ஈடுபடுகின்றனர். இதுபற்றி மாவட்ட கலெக்டர் கருணாகரனுக்கு கடந்த இரு வாரங்களாக அடுத்தடுத்து புகார் மனுக்கள் வந்துகொண்டே இருந்தன. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், மாவ ட்டம் முழுவதும் வட்டார வ ளர்ச்சி அலுவ லர் தலைமை யில் வருவாய்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளை கண்டறிந்து சீல் வைத்து வருகின்றனர். முறைகேடாக தண்ணீர் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை தெற்கு வட்டம் சீரபாளையம், குறிச்சி பகுதியில் மட்டும் கடந்த 2ம்தேதி ஒரே நாளில் 5 ஆழ்குழாய் கிணறுகளுக்கு சீல் வைத்துள்ளனர். மின்இணைப்புகளை துண்டித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரத்தினசாமி, பாலகிருஷ்ணன், குப்புசாமி, ராமசாமி, வேலுசாமி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கோடையை பயன்படுத்திக்கொண்டு, வணிக ரீதியில் இயங்கும் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளையும் தயவுதாட்சண்யமின்றி இழுத்து மூடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.