தினமலர் 27.08.2012
மெட்ரோ ரயில் வழித்தட கட்டட விதிகள் தளர்வு :ஆய்வு பணிகளுக்கு தனியார் நிறுவனம் தேர்வு
சென்னை : சென்னையில், மெட்ரோ ரயில் வழித்தடத்தில், மக்கள் நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், கட்டடங்களுக்கான விதிகளை தளர்த்துவது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான, ஆலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் போக்குவரத்து மேம்பாட்டுக்காக, வண்ணாரப்பேட்டையில் இருந்து, விமான நிலையம் வரையிலான, 23.1 கி.மீ., தூரத்துக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, பரங்கிமலை வரையிலான, 22 கி.மீ., என, மொத்தம், 45.1 கி.மீ., தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.விதிகள் தளர்வுஇப்பணிகள் முடியும் சூழலில், இந்த வழித்தடத்தையொட்டிய பகுதிகளில் மக்கள் குடியேறுவது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, மக்கள் அதிக அளவில் குடியேறுவதை ஊக்குவிக்கும் வகையில், இப்பகுதியில் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இருபுறமும் குறிப்பிட்ட தூரம் வரையிலான இடங்களில், கட்டப்படும் கட்டடங்களுக்கு, பல்வேறு சலுகைகள் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, இந்த வழித்தடத்தின் இரு பக்கங்களிலும், புதிய குடியிருப்புகளுக்கான தளப்பரப்பு குறியீட்டின் அளவை அதிகரிப்பது, திட்ட அனுமதிக்கான நடைமுறையை எளிதாக்குவது போன்ற வகைகளில் விதிகள் தளர்த்தப்படும் என, நகரமைப்புத்துறை அறிவித்திருந்தது.
இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, சி.எம்.டி.ஏ., உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:விதிகளை தளர்த்துவதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து தெரிவிக்குமாறு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தை (சி.எம்.டி.ஏ.,) நகரமைப்புத்துறை கேட்டுக்கொண்டது. இதன்படி முதல்கட்ட ஆய்வு களை மேற்கொண்டதில், மெட்ரோ ரயில் வழித்தடப் பகுதி முழுவதையும் ஆய்வு செய்தால்தான் ஒட்டுமொத்தமாக என்னென்ன சலுகைகள் வழங்க முடியும் என்பது தெரியவரும். இதற்கான ஆய்வு மற்றும் ஆலோசனை பணிகளுக்கு தனியார், பொறியியல் நிறுவனத்தை அமர்த்துவது என, முடிவு செய்யப்பட்டது.நிறுவனம் தேர்வுஒப்பந்தம் கோரும் பணிகள், சி.எம்.டி.ஏ., மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனம் (டுபிசெல்) மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில், “எல் அண்டு டி கல்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பணிக்காக இந்நிறுவனத்துக்கு, 72 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.அடுத்த சில மாதங்களில் இந்நிறுவனம் தன் பணிகளை முடித்து அறிக்கை அளிக்கும். அதன்பின், கட்டுமான விதிகளை தளர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.