தினமலர் 15.12.2010
மெட்ரோ வாட்டர் பணிக்காக துருப்பிடிக்காத குழாய்கள்
ஆலந்தூர்
: மத்திய – மாநில அரசுகளின் சார்பில் 67 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஆலந்தூரில் அமைக்கப்படும் மெட்ரோ வாட்டர் பணிக்காக நங்கநல்லூரில் துருப்பிடிக்காத நவீன பகிர்மான குழாய்கள் அளவு வாரியாக குவித்து வைக்கப்பட்டுள்ளது.சென்னை, ஆலந்தூர் நகராட்சியில் 1.75 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு, சென்னை குடிநீர் வாரியம் மூலம் 100 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இது, இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு போதுமானதாக இல்லை.நிலத்தடி நீர்மட்டமும் மிக ஆழத்திற்கு சென்றுவிட்டதால் குடிநீர் தட்டுப் பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க மத்திய – மாநில அரசுகள் மற்றும் ஆலந்தூர் நகராட்சி சார்பில் 67 கோடி ரூபாய் செலவில் புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு தில்லை கங்கா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது.இதையடுத்து, தில்லை கங்கா நகரில் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றும், 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது.நங்கநல்லூர் ஸ்டேட் பாங்க் காலனியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்றும், நேரு நெடுஞ்சாலையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவிலான கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.சாந்தி நகரில் முதல் மற்றும் 2வது தெரு, சுரேந்தர் நகரில் மூன்றாவது தெரு, நங்கநல்லூர் 32 மற்றும் 34வது தெருக்கள், ராம்நகரில் ஐந்தாவது தெருவில் குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்படுகின்றன. அதற்காக, லேண்ட்கோ என்ற நிறுவனத்திடமிருந்து நவீன வகையான துருப்பிடிக்காத எல்.இ.டி., பகிர்மான குழாய்களுக்கு ஆர்டர் தரப்பட்டது.அதன்படி, ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பகிர்மான குடிநீர் குழாய்கள் அளவு வாரியாக தருவிக்கப்பட்டு, நங்கநல்லூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன.”இத்திட்டத்தின்படி, 37 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் ஆறு, 15 லட்சம் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தொட்டிகள் ஐந்து அமைக்கப்படும்.மொத்தம் 144 கிலோ மீட்டர் தூரத்திற்கு பகிர்மான குழாய்கள் பதிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்ததும், 290 லட்சம் லிட்டர் குடிநீரை தேக்கி வைக்க முடியும். நபருக்கு 135 லிட்டர் வரை குடிநீர் கிடைக்கும்.இப்பணிகள் இரண்டாண்டுகளில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.