தினமணி 08.09.2010
மேயர், ஆட்சியர், ஆணையர் ஜெர்மனி பயணம்
கோவை, செப்.7: கோவை மேயர், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் அரசுமுறைப் பயணமாக ஜெர்மனிக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டனர்.
ஜெர்மனி நாட்டின் எஸ்லிங்கன் ஆம் நெக்கர் நகரை நேரில் பார்வையிடும்படி கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம், ஆணையர் அன்சுல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் ஆகியோருக்கு அந்நகர மேயர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று மூவரும் செவ்வாய்க்கிழமை ஜெர்மனி புறப்பட்டனர். அங்கு, இரு மாநகராட்சிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.
இதன்மூலம் இரு நகரங்களுக்கு இடையே சுகாதாரம், கல்வி, சமுதாய சேவைகள், உள்ளாட்சிப் பணிகள் குறித்து விவர பரிமாற்றம் செய்ய முடியும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர் அமைப்புகள், தொழில் கூட்டமைப்புகள் ஆகியவற்றுக்காக அடித்தளம் அமைக்கவும் இந்தப் பயணம் உதவும்.
கோவை மாநகரின் தொழில்துறை வளர்ச்சிக்கு இப் பயணம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று மேயர் வெங்கடாசலம் கூறினார். மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் சென்றுள்ள இவர்கள், செப்.15-ம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள்.
கோவையில் இருந்து புறப்பட்ட மூவருக்கும், மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வெ.ந.உதயக்குமார், கணக்குக் குழுத் தலைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.