தினமலர் 08.01.2010
மேலப்பாளையம் ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
திருநெல்வேலி : மேலப்பாளையம் ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.நெல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்திற்கு பின் மேலப்பாளையம் ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களை சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார். அனைத்து வார்டுகளுக்கும் அமைச்சர் சென்று ஆய்வு செய்தார். குழந்தைகள் நல வார்டு சுத்தமாக இல்லை என ஒருவர் புகார் கூறினார். மேலப்பாளையத்தில் கலங்கிய குடிநீர் வருவதாகவும் அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் மற்றும் கமிஷனருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த ஜாகீர் உசேன், டாக்டர்கள் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் கூறினார். அப்போது அருகில் இருந்த டாக்டரிடம் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அவருடன் அமைச்சர் மைதீன்கான், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சித்த மருத்துவ கையேடு வெளியீடு : ஆய்வு கூட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் சிக்குன்–குனியா, பன்றிக் காய்ச்சல் நோய்களுக்கு பயன்படுத்தப்படும் சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவம் குறித்த விளக்க கையேட்டை சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட முதல் பிரதியை சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் பெற்றுக் கொண்டார். இதில் கலெக்டர் ஜெயராமன், சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ், இந்திய மருத்துவம் முதன்மை செயலாளர் ராஜ்குமார், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார், ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன், டாக்டர் சுபாஷ் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.