தினகரன் 03.06.2010
மைசூர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் கோரிக்கை ஏற்பு உண்ணாவிரதம் வாபஸ்
மைசூர், ஜூன் 3: மைசூர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் ஒப்புகொண்டதால், கடந்த 9 நாட்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.
மாநகராட்சியில் தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்பட பல கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 9 நாட்களாக தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர்.
இதன் காரணமாக மாநகராட்சியில் துப்புரவு பணி வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட கலெக்டர் மணிவண்ணன் மற்றும் முன்னாள் மேயர் நாராயண், தொழிற்சங்க தலைவர்கள் அய்யப்பா, நாராயணசாமி, மாநகராட்சி ஆணையர் ராய்கர் ஆகியோருடன் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
அதில், 9 கோரிக்கைகளில் 5ஐ நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. அதன்படி ரூ.110 தினக்கூலியை ரூ.150ஆக உயர்த்துவது, இ.எஸ்.ஐ. மற்றும் தொழிலாளர் வைப்பு நிதி சலுகை பெறும் தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ.140ல் இருந்து ரூ.200ஆக உயர்த்துவது, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளான்று, தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 ஊக்க தொகை வழங்குவது, தொழிலாளர் பிள்ளைகளுக்கு பி.யு.சி. வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி மற்றும் நார்ம் திட்டத்தில் வீடு கட்டி கொடுப்பது ஆகிய 5 கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்பட்டன.
மேலும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்வது, சம வேலைக்கு சம கூலி, யஷஸ்வினி திட்டத்தில் மருத்துவ வசதி, காலி பணியிடம் நிரப்புவது ஆகிய 4 கோரிக்கைளை நிறைவேற்ற அரசுக்கு சிபாரிசு செய்யவும் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. தங்கள் கோரிக்கையை 60 சதவீதம் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் ஒப்புகொண்டதை தொடர்ந்து, போராட்டத்தை விலக்கி கொண்டு நேற்று முதல் பணிக்கு திரும்பினர்.