தினமலர் 25.11.2010
மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால் வாலாஜாபாத்தில் குடிநீர் தட்டுப்பாடு
வாலாஜாபாத் : வாலாஜாபாத்தில் சிலர் மின் மோட்டார் பயன்படுத்தி, குடிநீரை உறிஞ்சுவதால் பலர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. பேரூராட்சியில் 12 ஆயிரத்து 400 பேர் வசித்து வருகின்றனர். நேரு நகர், பேரூராட்சி அலுவலகம், சேர்காடு ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டு, மக்களுக்கு பாலாற்று குடிநீர் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர தெருவிற்கு இரண்டு தெருக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வரியாக மாதம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வீடுகளில் குடிநீர் இணைப்பு பெற்ற பலர் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சி தொட்டிகளில் சேமித்து வைக்கின்றனர். இதனால் தெரு குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. மின் மோட்டார் பொருத்தாதவர்களுக்கும் போதிய அளவு குடிநீர் கிடைப்பதில்லை.
இதனால் பாதிக்கப்படுபவர்களும் தங்கள் வீடுகளில் குடிநீர் தொட்டி கட்டி குடிநீரை சேமித்து வைக்க துவங்கியுள்ளனர். வசதி படைத்தவர்கள் உடனடியாக குடிநீர் தொட்டி கட்டுகின்றனர். மின் மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுகின்றனர். வசதி இல்லாதவர்கள் குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது. மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவதை தடுக்க வேண்டிய பேரூராட்சி நிர்வாகம் அமைதியாக இருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜன் கூறும்போது, “பேரூராட்சியில் மொத்தம் 1,480 குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒரு தெருவிற்கு இரண்டு குழாய்கள் வீதம் 35 பொதுக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெருக் குழாய்கள் தவிர அனைத்து குழாய் இணைப்பிற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது‘ என்றார்.