தினமணி 30.07.2009
மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிப்பு: ஆட்சியர்
விருதுநகர், ஜூலை 29: மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தென்மேற்குப் பருவ மழை தாமதமாவதால், பொதுமக்களுக்கும், பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விடுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல், தொடர்ந்து கண்காணித்து சீராக வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில் ஆட்சியர் சிஜி தாமஸ் வைத்யன் பேசியதாவது:
மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பகுதிகளுக்கு அதற்கான நேரத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக இருக்க வேண்டும். மின் விநியோகத்திலும் திடீர் பாதிப்பு ஏற்படக் கூடாது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு குடிநீர் கட்டண நிலுவைத் தொகையை ஊராட்சிகள் தாமதமின்றி செலுத்த வேண்டும்.
ஏழாயிரம்பண்ணை கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கும் இடங்களில் குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும்.
வல்லநாடு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் கைலாசபுரம் நீரேற்று நிலையத்துக்கு மின்சாரம் தடை ஏற்பட்டால், மாற்று இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்துக்கு குடிநீர் விநியோகம் சீரான முறையில் அமையும்.
மோட்டார் மூலம் குடிநீரை எடுத்தால், மோட்டார் பறிமுதல் செய்யப்படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும். இதற்காக அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் ஆட்சியர்.
குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் கதிர்வேல், நிர்வாகப் பொறியாளர் முகமது சுப்புகனி, உதவி செயற் பொறியாளர்கள் சந்திரன், ரெங்கசாமி, சௌந்திரராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ராமநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.