தினமலர் 05.05.2010
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்: நகராட்சி கட்டிடத்திற்கு விரைவில் மாற்றம்
மேட்டூர்: மேட்டூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், விரைவில் மேட்டூர் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் ஆர்.எஸ்.ஸில், பத்து ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்குகிறது. புதிதாக எஃப்.சிக்கு கொண்டு வரும் லாரி, பஸ்களை நிறுத்தி ஆய்வு செய்ய அப்பகுதியில் போதிய இடம் இல்லை.மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் மாற்று இடம் தேடி வந்தனர். மேட்டூர்–பவானி மெயின்ரோட்டில் காவிரி கரையோரத்தில் மேட்டூர் நகராட்சி பயணியர் விடுதி உள்ளது. தற்போது இந்த பயணியர் விடுதி பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அதனால், பயணியர் விடுதியை இரவில் குடிமகன்கள் மது அருந்தும், ‘பார்‘ ஆக பயன்படுத்தி வருகின்றனர். பயணியர் விடுதி வளாகத்தில் காலி நிலமும் அதிகமாக உள்ளது. பயன்பாடின்றி கிடக்கும் பயணியர் விடுதியை மோட்டார் வவாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வாடகைக்கு விடகோரி அதிகாரிகள் நகராட்சியிடம் ஒப்புதல் கேட்டுள்ளனர். எனவே, மேட்டூர் ஆர்.எஸ்.ஸில் இயங்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் விரைவில் மேட்டூர் அணை அடிவாரத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மேட்டூர் நகராட்சி தலைவர் சாந்தி கூறியதாவது: மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வாடகைக்கு விடுவதற்காக நகராட்சி பயணியர் விடுதி மற்றும் மீன்விதைப்பண்ணை எதிரில் பயன்பாடின்றி கிடக்கும் நகராட்சி தியேட்டர் ஆகியவற்றை காட்டியுள்ளோம். வாகன ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள் எந்த இடத்தை தேர்வு செய்கிறார்கள் என தெரியவில்லை. அவர்கள் எந்த இடத்தை தேர்வு செய்கிறார்களோ, அந்த இடம் நகராட்சி சார்பில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வாடகைக்கு விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.