தினமலர் 01.03.2010
மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு ‘கட்‘
ஆத்தூர்: “ஆத்தூரில் குடிநீர் குழாய் இணைப்பில் மின்மோட்டார் பொருத்தி நேரடியாக குடிநீரை உறிஞ்சினால், இணைப்பு துண்டிக்கப்படும்‘ என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் 70 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். காந்தி நகர், கடைவீதி, நாராயணபுரம், உப்பு ஓடை பகுதி என ஐந்து இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். குறைந்தளவு தண்ணீர் வழங்குவதால் சரிவர குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது.
பல மாதங்களாக நகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் 15, 20 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர்.கடந்த ஃபிப்ரவரி 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 622.670 லட்சம் லிட்டர் தான் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. சராசரியாக நாள்தோறும் 28.30 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் ஆத்தூர் நகராட்சி பகுதிக்கு வந்துள்ளது. அதனால் நகராட்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நீடித்து வருகிறது.இந்நிலையில், “ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வீடுகள், தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அந்நீரை காய்ச்சி கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.”குடிநீர் குழாயில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறுஞ்சினால் நகராட்சி சட்டவிதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்து, நீதிமன்றத்தின் மூலம் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு தொடரப்படும்‘ என, ஆத்தூர் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.