தினமணி 17.03.2010
மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை
சேலம், மார்ச் 16: சேலம் மாநகரில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
÷இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி: சேலம் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கோட்டங்களிலும் சீரான குடிநீர் வழங்கிட, மாநகராட்சி செயற்பொறியாளர் தலைமையில் உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர், பிட்டர், குழாய் ஆய்வாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
÷மாநகரின் பல இடங்களில் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சுவதாக தெரிய வந்துள்ளது. அவ்வாறு செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் திரும்ப வழங்கப்படமாட்டாது. மேலும் மூன்று ஆண்டு குடிநீர் வரியையும் அபராதமாக செலுத்த நேரிடும். அபராதம் அனைத்தும் செலுத்திய பிறகு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.ஆயிரம் வசூலிக்கப்படும். எனவே பொதுமக்கள் யாரும் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்ச வேண்டாம் என்று ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.