தினமணி 18.12.2009
மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால் நடவடிக்கை
போடி, டிச. 17: போடியில் மோட்டார் வைத்து குடிநீர் எடுóப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போடி நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் எச்சரித்துள்ளார்.
போடி நகராட்சி 33 வார்டுகளில் 4 ஆயிரம் குடிநீர்க் குழாய் இணைப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந் நிலையில், நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பலர் தங்கள் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் பொறுத்தி தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதனால் அருகில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் மனுக்கள் பல அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரவணக்குமார் தெரிவித்தபோது, நகராட்சி குடிநீர் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் பலர் தண்ணீரைச் சட்ட விரோதமாக நகராட்சி விதிமுறைகளுக்கு எதிராக மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து வருவதாக பல புகார் மனுக்கள் வந்துள்ளன.
நகராட்சி குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது குறிóத்து தெரியவந்தால், நகராட்சி உரியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும். இதுகுறித்து வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் திடீர் சோதணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நகராட்சி குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்கள் உடனடியாக மோட்டார் இணைப்புகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றார்