தினகரன் 24.08.2010
ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி, ஆக.24: தூத்துக்குடி 1வது, 2வது ‘ரயில்வே கேட்’ களில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தூத்துக்குடியில் ரூ.4.95 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலகத்தை கடந்த 5ம் தேதி துணை முதல்வர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார். இங்கு நேற்று முதல் கூட்டம் நடந்தது. முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:
தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்பு பணி 2ம் கட்டமாக துவங்கி நடந்து வருகிறது. அண்ணாநகரில் இருந்து திரேஸ்புரம் வரை சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. பாதாளசாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும் ரூ.10 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர், துணைமுதல்வர் விரைவில் ஒப்புதல் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நகர போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விதமாக 1, 2வது ரயில்வே கேட் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சிக்கு மேயர் கஸ்தூரிதங்கம், கமிஷனர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறைமுக பொறுப்பு கழக உறுப்பினர் பெரியசாமி, பொறியாளர் ராஜகோபால், மாவட்ட திமுக துணை செயலாளர் அருணா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். அருகில் மேயர் கஸ்தூரிதங்கம்.