தினமலர் 21.10.2013
ராசாத்தாள் குளம் நீர் வரத்து பாதை தூர்வாரும் பணி துவங்கியது
அவிநாசி :ராக்கியாபாளையம் ராசாத்தாள் குளத்துக்கு நீர் வரத்து பாதையை தூர்வாரும் பணி நேற்று துவங்கியது.
திருமுருகன்பூண்டி பேரூராட்சி, ராக்கியா பாளையத்தில், 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குளத்துக்கு, நொய்யலின் கிளை வாய்க்கால் மூலம் தண்ணீர் வரத்து ஏற்பட்டு குளம் நிரம்பும். ஆறு ஆண்டுக்கு முன் நிரம்பிய குளம், இப்போது காய்ந்து கிடக்கிறது. குளத்துக்கு தண்ணீர் வரத்து பாதை பல இடங்களில் முட்புதர், செடிகளால் மண்டியும், சில இடங்களில் ஆக்கிரமிப்புகளாலும் அடைபட்டுள்ளது.
மழைக்காலங்களில் சேகரமாகும் தண்ணீர், முழுமையாக ராசாத்தாள் குளத்துக்கு வருவதில்லை. எனவே, குளத்தில் தண்ணீரை தேக்க, தூர்வாரும் பணியை, திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் நேற்று துவக்கியது. ராக்கியாபாளையத்தில் நடந்த பூமி பூஜைக்கு, பேரூராட்சி துணை தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் வெங்கட், செயலாளர் மோகன் குமார், ரோட்டரி துணை கவர்னர் ரவிச்சந்திரன், மாவட்ட சேர்மன் (மாணவர் நலன்) முருகானந்தன், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் ராமசாமி, கோபால், லதா மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், “பூண்டி பேரூராட்சி மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், தொழிலதிபர்களின் உதவியோடு, குளத்தின் நீர்வரத்து பாதை தூர்வாரும் பணியை துவக்கியுள்ளோம்.
முதல்கட்டமாக, கணியாம்பூண்டி முதல் குளம் வரை 3.5 கி.மீட்டரிலுள்ள கால்வாய் சீரமைக்கப்படும். அதன்பின், பொதுமக்கள் பங்களிப்போடு, குளத்தில் கரசேவை நடத்தப்படும்,’ என்றார்.