மாலை மலர் 20.11.2013

நொச்சி செடிகள், பப்பாளி கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டம் மற்றும்
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு ஆகிய
நிகழ்ச்சிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலி காட்சி(வீடியோ
கான்பரன்சிங்) மூலம் தொடங்கி வைக்கிறார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுபடி, சென்னையில் உள்ள நீர்நிலைகள்,
நீர் வழித்தடங்கள் ஓரத்தில் அமைந்துள்ள குடிசை பகுதிகள் மற்றும் குடிசை
மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு இலவச கொசு
வலை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஏற்கனவே
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளையொட்டி பசுமை போர்வை என்ற
திட்டத்தின் கீழ், சென்னை மாநகரில் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில்,
வீடுகள், பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள்,
மருத்துவமனை வளாகங்கள், நீர்நிலைகள், நீர்வழித்தடங்கள் மற்றும் மயான
பூமிகள் போன்ற பொது இடங்களில் 6½ லட்சம் எண்ணிக்கையில் ‘நொச்சி’ செடிகள்
நடப்படும் என்று மன்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், சென்னையில் உள்ள
மாநகராட்சி, அரசு, தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் பயின்று வரும்
மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், வைட்டமின் ‘ஏ’ என்னும்
உயிர்ச்சத்தை பெற்றிடும் வகையிலும், அனைவருக்கும் ஒரு பப்பாளி கன்று வீதம்
6½ லட்சம் பப்பாளி கன்றுகள் இலவசமாக வழங்கும் திட்டமும் மாநகராட்சி
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
முதல்-அமைச்சர் பிறந்தநாளையொட்டி, அரசு பொது தேர்வுகளான யு.பி.எஸ்.சி.,
டி.என்.பி.எஸ்.சி. போன்ற போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்களுக்கு
இலவசமாக பயிற்சி அளிக்கும் திட்டமும் சென்னை மாநகராட்சியில் தீர்மானமாக
நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த திட்டங்கள் அனைத்துக்கும் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், 5 லட்சம்
வீடுகளுக்கு தலா ஒரு கொசு வலை வழங்குதல், 6½ லட்சம் நொச்சி செடிகள் நடுதல்
ஆகிய திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் இன்று (புதன்கிழமை)
காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
வீடுகளில், தொட்டிகள் மற்றும் தரையில் வைத்து நொச்சி செடிகளை வளர்க்க
விரும்புவோர் அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள மண்டல அலுவலகங்களை தொடர்பு
கொண்டு இலவசமாக செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.
இது தவிர 6½ லட்சம் பப்பாளி கன்றுகள் வழங்குதல், போட்டி தேர்வுகளுக்கான
பயிற்சிகளை வழங்குதல் போன்ற திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
மேலும் முதன் முதலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா
உணவகத்தையும் முதல் அமைச்சர் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி
வைக்கிறார்.
அனைத்து அம்மா உணவகங்களிலும், இரவு நேர உணவாக ரூ.3-க்கு 2 சப்பாத்தி
மற்றும் பருப்பு கடைசல் வழங்கும் திட்டமும் முதல்-அமைச்சரால் இன்று தொடங்கி
வைப்பதாக இருந்தது. ஆனால் போதுமான பயிற்சி அளிக்கப்படாத காரணத்தால் இந்த
திட்டம் இன்னும் ஓரிரு நாட்கள் கழித்து தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் 6½ லட்சம் பனைமர கன்றுகள் நடும் திட்டமும் வனத்துறையினரின் கருத்தை கேட்டு பின்னர் தொடங்கப்பட உள்ளது.