தினகரன் 21.12.2010
ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி தீவிரம்
ராமநாதபுரம், டிச. 21:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.617 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கடந்தாண்டு துவங்கியது. இத்திட்டத்தில் முதற்கட்டமாக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் இன்னும் நூறு சதவீதம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படவில்லை. இத்திட்டத்தில் பெரும்பாலும் ஏற்கனவே இருந்த மேல்நிலைத் தொட்டிகள், குடிநீர் குழாய்களே பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தற்போது வரும் தண்ணீர் அதிகளவில் இருப்பதால் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து, தண்ணீர் வெளியேறுகிறது.
ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிக்கு போதுமான அளவு தண்ணீர் இத்திட்டம் மூலம் வந்தும் அனைத்து பகுதிகளுக்கும் பழைய குழாய்கள் மூலம் சப்ளை செய்ய முடியவில்லை. மேலும் புதிதாக ஏராளமான குடியிருப்புகள் உருவாகியிருப்பதும், அப்பகுதிகளுக்கு இணைப்புகள் கொடுக்க வேண்டியும் உள்ளது. தற்போதுள்ள நிலையில் ஏராளமான பகுதிகளில் பொதுக் குழாய்களும் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் சப்ளை செய்வதற்காக புதிய குழாய்கள் பதிக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நகராட்சி பகுதி தெருக்களில் நடந்து வருகிறது. பி.வி.சி., குழாய்கள் 1.5 மீட்டர் ஆழத்தில் பதிக்கப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் ஒப்பந்ததாரர்கள் சேலம், கோவை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து ஆட்களை அழைத்து வந்து பணிகளை செய்கின்றனர். இந்த பணிகளை வரும் ஜனவரிக்குள் முடிக்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே குழாய் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.