தினமணி 11.02.2010
ராமேசுவரம் மக்களுக்கு குப்பை கூடைகள் வழங்க யாத்திரை பணியாளர் சங்கம் முடிவு
ராமேசுவரம், பிப்.10: ராமேசுவரத்தை தூய்மைப் பகுதியாக மாற்ற கோயிலை சுற்றியுள்ள மக்களுக்கு குப்பைக் கூடைகள் வழங்கிட யாத்திரை பணியாளர் சங்கம் முடிவுசெய்துள்ளது.
ராமேசுவரம் அகில இந்திய யாத்திரைப் பணியாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் பாஸ்கரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கச் செயலர் ரவி, துணை தலைவர் முனியசாமி, துணைச் செயலர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ராமேசுவரம் தீவை பாலிதீன் தடை செய்த பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து அதிகாரிகளின் நடவடிக்கையால், தீவு பகுதி தூய்மை பகுதியாக காட்சியளிக்கிறது. இதைப் பேணிகாக்கவும் கோயிலைச் சுற்றி சுற்றுசூழலைப் பாதுகாத்திடவும் நான்கு ரதவீதயில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு குப்பை கூடைகள் வழங்குவது;
ராமேசுவரம் நகரின் முக்கிய இடங்களில் பாலிதீன் ஓழிப்பு குறித்த அறிவிப்பு பலகையை அனைத்து மொழியிலும் வைத்து விளம்பரம் செய்வது; ராமேசுவரம் வரும் பக்தர்களுக்காக பேருந்து நிலையத்தில் நிழற்குடை, குடிநீர்த் தொட்டி மற்றும் பேருந்து, ரயில் போக்குவரத்து கால அட்டவணை பலகை அமைத்திடவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு நகராட்சி அலுவலகம் அனுமதி வழங்கிட மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.