தினமலர் 30.09.2010
ரிப்பன் கட்டடம் தபால் உறை வெளியீடு
சென்னை : சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்குவதைத் தொடர்ந்து, சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது.சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் செயல்படும் ரிப்பன் கட்டடம், ஆங்கிலேயர் ஆட்சியில் 1909ம் ஆண்டு கட்ட துவங்கப்பட்டு 1913ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ரிப்பன் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்குவதைத் தொடர்ந்து சரித்திர புகழ் வாய்ந்த கலை நயம் மிக்க ரிப்பன் கட்டடத்தின் வடிவமைப்பை தபால் உறையில் வெளியிட வேண்டும் என்று, தபால் துறையிடம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்தது.அதைத் தொடர்ந்து தி.நகர், சர்.பி.டி, தியாகராய கலையரங்கில் நடந்த விழாவில் தபால் துறையின் தென்மண்டல தலைவர் ராமானுஜம், ரிப்பன் கட்டட வடிவமைப்பு அச்சிடப்பட்ட தபால் உறையை வெளியிட, மேயர் சுப்ரமணியன் பெற்றுக் கொண்டார்.சென்னை மாநகராட்சி தினத்தை ஒட்டி அகில இந்திய மாநகராட்சியின் மக்கள் பிரதிநிதிகளிடையே நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் சுப்ரமணியன் பரிசு வழங்கினார். கோவை, மைசூர், பாட்னா, ஐதராபாத், சேலம், சூரத், மதுரை, திருப்பூர், உள்ளிட்ட ஒன்பது மாநகராட்சியின் 156 பிரதிநிதிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். ஐதராபாத் மாநகராட்சி 67 புள்ளிகள் பெற்று முதலிடமும், சென்னை மாநகராட்சி 66 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்று கோப்பைகளை வென்றன.இந்த நிகழ்ச்சியில் சேலம் மேயர் ரேகா பிரியதர்சினி, கமிஷனர் ராஜேஷ் லக்கானி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.