தினமலர் 16.04.2010
ரேஷன்கார்டில் முகவரி மாற்றம் பெயர் திருத்தம் செய்யலாம் : மாநகராட்சி மக்களுக்கு வாய்ப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ளவர்கள் ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த முகாமை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் (பொ) துரை. ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோளுக்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. ரேஷன் கார்டில் பிழைதிருத்தம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் இந்த சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்படுகிறது. சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடக்கும் இம்முகாமில் அரசுத்துறை அதிகாரிகள், சிவில் சப்ளை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று, தங்களது கோரிக்கையை உரிய சான்று ஆவணம் கொடுத்து நிவர்த்தி செய்து பயன் பெறலாம். பொருள் நிறுத்த பட்டியலில் உள்ள ரேஷன்கார்டுதாரர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள வேண்டாம். இவ்வாறு கலெக்டர் (பொ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.